9.7.11

ஜமாஅதே இஸ்லாமியின் இரவுத்தொழுகை.

இஸ்லாஹியின் நேர்மாறான பார்வை.
உட்பூசல்கள், பொறாமைகள், வஞ்சகத்தால் நிறைந்த நெஞ்சை நக்கும் போதனைகள் போன்றவற்றின் சுயருபம் அறியாமல் அப்பாவித் தனமாக ஜமாஅதே இஸ்லாமியின் மாய வலைக்குள் சிக்கியிருக்கும் அன்பர்களே, சரியாக ஆராயாமல் ஜமாஅதே இஸ்லாமியை மனப்பூர்வமாக சரிகாணும் ஊழியர்களே. தூய இஸ்லாத்தினை மண்டையைப் போட்டு உடைத்து மயிரிழை ஆராய்ச்சி ஏதும் செய்யாமல் ஜமாஅதே இஸ்லாமி உரைப்பது போல் அலட்டிக்கொள்ளாத பாணியில் மட்டும் நீங்கள் விளங்குகிறீர்கள் என்றால் இந்தப்பிரசுரம் உங்களுக்காக மட்டும் தான்.
பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் உங்களின் மனசாட்சியோடு சற்று கதைத்துப்பார்க்க நாம் ஆசைப்படுகிறோம். நாம் பழகிய மாத்திரத்தில் ஜமாஅதே இஸ்லாமியின் அனேக ஆதரவாளர்களும் ஊழியர்களும் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மையானவர்களாகவும், உண்மையாளர்களாகவும் இருப்பதால் உங்கள் மனசாட்சியும் உண்மையைத் தான் உரைக்கும் என்பதே எமது நம்பிக்கை. அதனால் தான் இந்த முயற்சி.
தூய இஸ்லாத்துக்காகத் தான் நீங்கள்  ஜமாஅதே இஸ்லாமி எனும் இயக்கத்தை ஆதரிக்கிறீர்கள் என்றால் உங்களோடு எதைப்பற்றிப் பேசினாலும் தகும். ஏனெனில் நீங்கள் விரும்புவது இயக்கத்தை விட இஸ்லாத்தையாகும். மாதம்பை இஸ்லாஹிய்யாவில் பணிபுரியும் நிலாம் மௌலவி என்பவரால் ‘இரவுத் தொழுகை. ஒரு நேர்மையான பார்வை’ என்ற துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் தான் இஸ்லாமிய வட்டத்துக்குள் இல்லை என்பதைத் தெளிவாக அறிவித்துள்ளார்.
அதற்கு முன்னால் எமது ஜமாஅதே இஸ்லாமியின் நடுநிலையான ஆதரவாளர்களிடம் மனந்திறந்த ஒரு கேள்வி. ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர்களும், உலமாக்களும் உங்களிடம் சொல்லும் விடயங்கள், அல்லாஹ்வாலும், தூதராலும் சொல்லப்பட்டது தானா, அல்லது அது அவர்களின் சொந்தக் கருத்தா என்பதை உங்கள் வாழ்நாளில் ஒருநாளாவது சரிபார்த்து இருக்கிறீர்களா? அல்லது, அஷ்ஷேக் எப்பேர்ப்பட்ட தலையுள்ளவர், நமது நளீமி எவ்வளவு நல்லவர், எங்கள் இஸ்லாஹி எவ்வளவு அடக்கமானவர், நம் காஸிமியின் முகத்தில் தான் எத்தனை தேஜஸ், எங்கள் அமீரின் கண்களில் தான் எத்தனை பக்திப் பரவசம் என்று அளந்து பார்த்து மட்டும் தான் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?
உண்மையில் உங்களால் முடியுமானவரை குர்ஆனைப் புரட்டி, ஹதீஸ்களைப் புரட்டிப் பார்த்து உங்கள் அறிஞர்?களின் கருத்துக்களோடு எதிர்க்கருத்தில் உள்ளவர்களின் வாதங்களை செவியுற்று, ஒப்பிட்டு உங்கள் பொன்னான பகுத்தறிவைப் பயன்படுத்தி ஒரு முடிவுக்கு வந்து தான் நீங்கள் இன்னும் ஜமாஅதே இஸ்லாமியினை ஆதரிக்கிறீhகள் என்றால், உங்களுக்கு அறிவுரை சொல்ல நாம் தகுதியற்றவர்கள். ஏனெனில் இப்பேர்ப்பட்டவர்களைத் தான் அல்லாஹ் புத்திசாலிகள் என்று சிலாகிக்கின்றான்:
நம்பிக்கை கொண்ட அவர்கள் அனைத்து சொற்களையும் செவியேற்று, அதில் அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம். இவர்கள் தாம் நல்லறிவுடையோர். 39:18
மாறாக இதையெல்லாம் குந்தி ஆராய்ந்து கொண்டிருப்பதற்கு நமக்கெங்கு நேரம் இருக்கிறது என்று அங்கலாய்ப்பவர்களுள் ஒருவர் தான் நீங்களென்றால், இந்தத் துண்டுப் பிரசுரம் ஒன்றே போதும் நீங்கள் சரியான முடிவெடுக்க.
இனி நிலாம் மௌலவியின் அந்தத் துண்டுப் பிரசுரத்தை அலசிப் பார்ப்போம். எல்லாவற்றுக்கும் மேலாக இவர் இஸ்லாத்தின் அடிப்படைகளே தெரியாதவர் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார். அவர் எழுதிய வாசகத்தை அணுப்பிசகாமல் இங்கே தருகிறோம்.
‘நாம் நபி ஸல் அவர்களின் ஸூன்னாவைப் பின்பற்றுவது அவசியம் என்பது போல ஸஹாபாக்களின் – குறிப்பாக கலீபாக்களின் – ஸூன்னாவைப் பின்பற்றுவதும் அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: நீங்கள் எனது ஸூன்னாவையும் நேர்வழி நடக்கும் கலீபாக்களின் ஸூன்னாவையும் பின்பற்றுங்கள். (அபூதாவுத்) கலீபாக்களின் ஸூன்னாக்களை மாத்திரமின்றி தாபியீன்களின் வழி முறைகளையும் பின்பற்றலாம் என்பதை பின்வரும் ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றது. ‘மிகச் சிறந்த  நூற்றாண்டு எனது நூற்றாண்டாகும். அதன் பிறகு அவர்களைத் தொடர்ந்து வருவோரது நூற்றாண்டாகும். அதன் பிறகு அவர்களைத் தொடர்ந்து வருவோரது நூற்றாண்டாகும். (புகாரி, முஸ்லிம், இப்னு அஸாகிர்). எனவே, மிகச் சிறப்பான அந்த மூன்று நூற்றாண்டுகளிலும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக உழைத்த மேதைகளின் வழிமுறைகளை பின்பற்றுவதில் முஸ்லிம் சமூகத்திற்கு நலவே இருக்கின்றது.’
பதில் சொல்லவே தேவையற்ற தெளிவான வழிகேடு இவரது எழுத்தில் புலப்படுகிறது என்றாலும், இதை நம்பி யாராவது வழிகெட்டு விட்டால், அதற்கு நாமும் பொறுப்பு என்ற வகையில் இந்த பதிலைக் கூறுகிறோம். இந்த ஹதீஸின் அடிப்படையில் இவரது வாதப்படியே இந்த ஹதீஸ் அவருக்கு எதிரான கருத்தையே தருகிறது. அதாவது இவரது வாதப்படி நான்கு கலீபாக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். அப்போது ஏனைய ஸஹாபாக்களை பின்பற்றுவது கூடாது என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இவர்கள் குறிப்பிட்டிருப்பது முழுமையான ஒரு ஹதீஸின் ஒரு பகுதியைத் தான். நபிகளாரைப் பொருத்தவரை தமது சொல் எங்கெல்லாம் தவறாகப் பொருள் கொள்ளப் பட்டு விடுமோ, அங்கெல்லாம் சரியான பொருளைக் கண்டு கொள்ளும் வகையிலான வார்த்தைகளையும் சேர்த்தே கூறிவிடுவார்கள்.
‘இஞ்சீலுக்குரியோர் அதில் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்’ (அல்குர்ஆன் 5:47). இவர்கள் மேற்கண்ட நபிமொழியை விளங்கியது போல் இந்த வசனத்தையும் விளங்கினால் என்னவாகும்? கிறித்தவர்கள் இன்றளவும் பைபிளின் அடிப்படையில் வாழலாம் என்று குர்ஆன் அனுமதிப்பதாகவே பொருள்கொள்ள வேண்டி வரும். இவ்வாறு நிலாம் மௌலவி அவர்கள் கூறத் தயாரா? என்பதை முதலில் அறிவிக்கட்டும். மார்க்கம் அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது வஹியை மட்டும் பின்பற்ற வேண்டுமென்ற தெளிவான கட்டளை இருக்கும் போது (அல்குர்ஆன் 2:38, 2:170, 3:103, 6:106, 6:114-115, 7:3, 10:15, 10:109, 33:2, 39:3, 39:58, 46:9, 49:16, 24:51-52, 5:3, 16:116, 42:21, 5:87, 6:140, 7:32, 9:29, 9:37, 10:59, 5:48-49) அதற்கு முரணில்லாத வகையில் மேற்கண்ட ஹதீஸை இவர் விளங்காமல் போனது ஏன்? ஆய்வுக் கோளாறா? அல்லது குறைகுடம் தளம்புகிறதா?
நாட்டின் ஜனாதிபதி தான் கலீபாக்கள் எனப்படுவோர். ஒருவர் முஸ்லிம்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால், அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அன்றேல் நாடு குட்டிச்சுவராகி விடும். ஜனாதிபதி என்ற முறையில் மார்க்க சம்பந்தமில்லாத நிர்வாக விசயங்களில் அவர்கள் சில வழிமுறைகளை மேற்கொண்டால், அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் இவர் கூறிய கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸில் ‘மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவைகளைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவை அனைத்தும் வழிகேடுகள்.’ என்ற வாக்கியத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.
மார்க்க விசயம் இல்லாத மற்ற விசயங்களில் தான் நேர்வழி பெற்ற கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட வாக்கியம் தெளிவுபடுத்தி விடுகிறது.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால், நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து ‘அபிஸீனிய அடிமையென்றாலும், கட்டுப்பட்டு நடங்கள்’ எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.
ஆட்சித் தலைவர் அபிஸீனிய அடிமை என்றாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று நபிகளார் கூறியதிலிருந்து, இது நிர்வாக சம்பந்தப்பட்டதையே குறிப்பிடுகிறது என்பதைத் தெளிவாக விளங்கலாம். நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபிஸீனியருமில்லைளூ அடிமையுமில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது இங்கு நபியவர்கள் அபிஸீனிய அடிமையாயினும் பின்பற்றுங்கள் என்று குறிப்பிட்டிருப்பது ஐந்தாவது கலீபாவையா? அல்லது ஆறாவது கலீபாவாவதற்கு அந்தரங்க முகாந்திரங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் ஜமாஅதே இஸ்லாமியின் அமீரையா?
கியாம நாள் வரை நேர்வழியில் ஆட்சி செய்யும் கலீபாக்களை நிர்வாக விசயத்தில் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை இவ்வாசகம் தெளிவாக அறிவிக்கவில்லையா?
மேலும் அதே ஹதீஸில் ‘நான் உங்களைப் பளீரென்ற பாதையில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலைப் போன்றது. நாசமாக போகிறவனைத் தவிர வேறு யாரும் வழிகெட மாட்டார்கள்’ என்பதையும் சேர்த்தே நபிகளார் கூறுகிறார்கள்.
மார்க்கத்தில் வேறு யாரையும் பின்பற்றி நடக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறிவிட்டு, அதற்கு முரணாக நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்றுங்கள் என்று கூறினால், அது நிர்வாக விசயத்தைத் தான் குறிக்குமே தவிர, மார்க்க விசயத்தை அல்ல.
நிலாம் மௌலவி அவர்கள் இரண்டாவதாகக் குறிப்பிட்ட ஹதீஸ் காலத்தால் சிறந்த மூன்று தலைமுறையினரான ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தப்உத் தாபிஈன்கள் ஆகியோர் நன்மக்கள் என்றே வருகிறது. அவர்களைப் பின்பற்றுமாறு அந்த ஹதீஸில் ஒரு வாசகம் கூட இல்லை. நல்லவராக இருப்போரையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றலாம் என்னும் இந்த நச்சுக் கருத்தை வைத்துத்த தானே பரம்பரை பரம்பரையாக இந்த ஜமாஅதே இஸ்லாமி ஆயிரமாயிரம் அப்பாவிகளை மூளைச்சலவை செய்து சிந்தனையின் வாசலை அடைத்து வைத்திருக்கிறது.
நிலாம் மௌலவி அவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி:
நோன்பு வைத்துக்கொண்டு பணிக்கட்டியை சாப்பிட்டால் நோன்பு முறியாது என்று அபூதல்ஹா (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மனைவியுடன் சேர்ந்த பின் விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பு கடமையில்லை என்று உஸ்மான் (ரழி), அலி (ரழி), தல்ஹா (ரழி) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். மதுபானம் விற்பனை செய்வது ஹலால் என்று ஸமுரா பின் ஜுன்துப் (ரழி) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேற்கண்ட மூன்று சம்பவங்களையும் பேரறிஞர் இப்னு ஹஸ்ம் அவர்கள் அறிவித்து விட்டு, அவரே இந்த மூன்று சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட காலத்தால் மிகச் சிறந்த மக்களான இந்த ஸஹாபிகளைப் பின்பற்றலாமா என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். நிலாம் மௌவலி அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? ஆம் என்றால், நீங்கள் நல்லோர்களின் சொல்லுக்காக குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்பட்டதாகி விடும். இல்லையென்றால், நீங்கள் உங்கள் கருத்துக்கே முரண்பட்டதாகி விடும். எப்படி வசதி?
இறுதி ஹஜ்ஜின் போது தம் இறுதி மூச்சை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நபியவர்கள் உரைத்துரைத்துக் கூறினார்களே ஒரு வாசகம், குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டேயிரண்டை மட்டும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்ளூ வழிதவற மாட்டீர்கள் என்ற நபிகளாரின் இந்த இறுதி எச்சரிக்கையின் பாரதூரம் கூட அறியாத இந்த மாமேதை தான் கியாமுல்லைலுக்குப் புதுப்புதுக் கோணங்களில் வரைவிலக்கணம் கிறுக்கியிருக்கிறார். நிலவைப் பார்த்து நாய் குரைத்தால் நிலவுக்கு நோகாது தான் என்றாலும், நாயின் குரைப்பை நிலவின் அச்சுறுத்தலாக மக்கள் நம்பிவிடக் கூடாதே என்ற பதற்றத்தில் தான் நாம் வேலைவெட்டியெல்லாம் ஓரங்கட்டி விட்டு, இவரது பிதற்றல்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்த உதாரணச் செம்மலான அஷ்ஷெய்க் நிலாம் இஸ்லா(மில்லாத)ஹியின் ச(த)ரித்திரம் மறக்காத தியாகங்களுள் ஒன்று தான் ஒரு பிடி கத்தச் சோற்றுக்காக இஸ்லாத்தைத் தியாகம் செய்தமை. அதிசயமாக இருக்கிறதா? இன்னுமிருக்கிறது கேளுங்கள். மையித்து வீட்டுக்கு ஹிஜ்ரத் செய்து மூக்குப் பிடிக்க மொத்தி விட்டு வந்து, மிம்பரில் இவர் கத்தம் சாப்பிடுவது இஸ்லாத்தில் கூடும் என்று ஒரு பத்துவாவையும் ஏப்பம் விட்டாராம். அடடடடா என்ன ஒரு தியாகம்! இப்பேர்ப்பட்ட நல்லவர்களைத் தான் பின்பற்ற வேண்டுமென்பது ஜமாஅதே இஸ்லாமியின் எண்ணம்.
இவர் இரவுத் தொழுகை சம்பந்தமாக கூறிய கருத்தின் சாராம்சம்: நபிகளார் இரவுத் தொழுகையின் ரக்அத்துக்களை வரையறுத்துச் சொல்லவில்லை (ஆனால் வரையறுத்து செய்துள்ளார்கள்) என்பது தான். ஆக இரவுத் தொழுகையைப் பொருத்தவரை எத்தனை ரக்அத்துக்கள் என்பது முக்கியமில்லை, எவ்வளவு நேரம் என்பது தான் முக்கியம். இது தான் இவர் கருத்து.
இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் உஸுலுல் ஹதீஸ் கற்பிக்கும் பேராசிரியரான இவர் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றும் தான் ஹதீஸ் என்னும் அடிப்படை ஹதீஸ்கலையைக் கூட அறியாத ஞானசூனியம் என்பது தான் விந்தை. இரவுத் தொழுகையெனும் இபாதத் விசயத்தில் ஆயிஷா நாயகி அறிவிக்கும் ஹதீஸான ‘நபிகளார் 11 ரக்அத்துக்களுக்கு அதிகம் தொழுததில்லை’ என்ற நபிகளாரின் செயல் இவருக்கு ஹதீஸாகத் தெரியவில்லையா? நேரடியான கட்டளை இருந்தால் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது தான் இவரது கருத்தாக இருந்தால் தொழுகை சம்பந்தப்பட்ட 90 வீதமான ஸுன்னாக்கள் சொல்லாகவோ, அங்கீகாரமாகவோ இல்;லாமல், செயலாக மாத்திரமே இருக்கின்றனவே, அவற்றைப் பின்பற்ற மாட்டாரா? அப்படியாயின் இவரது தொழுகையின் ஒவ்வொரு செயலுக்குமான ஆதாரம் இவருக்கு எங்கிருந்து கிடைத்தது?
இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்துக்களும் தொழலாம் என்பதற்கு இவர் வைத்துள்ள ஒரேயொரு ஆதாரம் பின்வரும் ஹதீஸ் தான்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்{ஹத் தொழுகை பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்’ என்று கூறினார்கள்.
இங்கு சுபுஹுத்தொழுகை வரை தொழலாம் என்று இருப்பது உண்மைதான். ஆனால் எத்தனை ரக்காத்துகள் என்று கூறப்படவில்லை. எத்தனை ரக்காத்துகள் என்று கூறப்படாத போது எத்தனையும் தொழலாம் என்று விளங்க முடியாது. ஏனெனில் இரவுத் தொழுகையைப் பொருத்த வரை ரக்காத்துகள் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. மேலும் இந்த ஹதீஸ் இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவதைப் பற்றி மட்டுமே கூறியிருக்கிறது.
இது போக 11 ரக்காத்துகளுக்கு மேல் நபிகளார் தொழவில்லையென்று தெளிவான ஹதீஸ் உள்ளது
புஹாரி  பாகம் 2, அத்தியாயம் 31, எண் 2013
அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: ‘நபி(ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், ‘ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள்; நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்; அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று கூறினார்.
மேலும் ஆயிஷா(ரலி) அறிவித்தார். பதினொரு ரக்அத்களை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள் என்று கூறிய ஆயிஷா(ரலி) அவர்கள் கூட நீங்கள் சுட்டிக்காட்டியது போன்ற ஒரு ஹதீஸைக் கூறுகிறார்கள்
புஹாரி பாகம் 1, அத்தியாயம் 14, எண் 996
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
இரவின் எல்லா நேரங்களிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகிறார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ரு ஸஹர் வரை நீண்டுவிடும்.
ஸஹர்வரை நபிகளார் தொழுதார்கள் என்பதற்கு அர்த்தம் நீங்கள் நினைப்பது போன்று எத்தனை ரக்காத்துகளும் தொழலாம் என்றால் ஆயிஷா(ரலி) அவர்கள் தனக்குத் தானே முரன்பட்டு அறிவித்தார்கள் என்றாகிவிடும்.
எனவே சுபுஹு வரை அல்லது ஸஹர் வரை தொழுவது என்பதன் பொருள் நீளமான ரக்காத்துகள் என்பதே தவிர அதிகமான ரக்காத்துகள் இல்லை.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால் நபிகளார் இரவுத் தொழுகையின் ரக்காத்துகளைக் கூட்டவில்லை. மாறாக நீளமான தொழுகையையே தொழுது உள்ளார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகளைப் பார்க்கலாம்
புஹாரி பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1135
அபூ வாயில் அறிவித்தார்.
‘நாள் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். நான் தவறான ஒரு முடிவுக்கு வருமளவுக்கு அவர்கள் நின்று கொண்டே இருந்தார்கள்’ என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது அந்தத் தவறான முடிவு எது? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ஸல்) அவர்களுடன் தொழுவதைவிட்டுத் தொழுகையை முறித்து விடலாம் என்று எண்ணினேன்’ என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நிலையில் நபிகளார் எவ்வளவு நேரம் நின்றார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
புஹாரி பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1147
அபூ ஸலமா அறிவித்தார்.
ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும் அது அல்லாத காலங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுமாட்டாகள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது நபிகளாரின் தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்துக்களும் எவ்வளவு நீளமானது என்பதைக் காட்டுகிறதே தவிர எத்தனையும் தொழலாம் என்பதற்கு அனுமதிப்பத்திரம் தந்ததாக ஆகிவிடவில்லை.
இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்துக்களும் தொழலாம் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் கிடைக்காததால் இமாம் இப்னு தைமியா, இமாம் அஹ்மத், பின் பாஸ், உஸைமீன், அல்ஜிப்ரீன் போன்றவர்களை ஆதாரம் காட்டியுள்ளார்கள். வஹியை மாத்திரமே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்கு இக்கருத்து சிரிப்பாயிருந்தாலும், இவர்கள் சுட்டிக்காட்டிய இதே இமாம்கள் ஜமாஅதே இஸ்லாமியின் ஏராளமான கருத்துகளுக்கு முரண்பட்டிருப்பது இவர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
எல்லாவற்றையும் மீறி இமாம்களையும், உலமாக்களையும், அமீர்களையும் நாம் பின்பற்றுவோம் என்று நீங்கள் அடம்பிடிப்பீர்கள் என்றால் உங்களைப்போன்றவர்களுக்கே அல்லாஹ் இறக்கிவைத்த குர்ஆன் வசனமொன்றைத் தருகிறோம். இமாம்களையும், உலமாக்களையும், அமீர்களையும், ஏன் அத்தனை நபிமார்களையும் விட மிக மிக உயர்ந்தவனான, தூயவனான, யாவற்றையும் அறிந்தவனான அல்லாஹ் சொல்கிறான் என்று கவனித்து இதைச் சிந்தித்துப் பாருங்கள்.
‘உங்கள் இறைவனிடம் இருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனை விடுத்து மற்றவர்களை பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்.’ 7:3.
அன்பின் ஜமாஅதே இஸ்லாமிய அறிஞர்கள் என்று சொல்லப்படுபவர்களே, நான் ஒரு நளீமி என்று பெருமைப்படுபவர்களே, தூய இஸ்லாத்தை வஹியின் அடிப்படையில் மட்டும் பின்பற்றுபவர்களைப் பார்த்து நீங்கள் கோபப்படுவதும், பொறாமைப்படுவதும் இயற்கைதான். மானமுள்ள சமுதாயமாக நீங்கள் இருந்தால் இந்தக் கோபத்தை எம்மிடம் காட்டுங்கள். வெட்கம் இருந்தால் எம்முடன் பேச வாருங்கள். சத்தியம் வெல்லும் அது தோற்காது என்றிருந்தால் இதுவே உங்களுக்கு சிறந்த வழி. மாறாக எம்மீது உள்ள கோபத்தை, காழ்ப்புணர்வை உங்கள் அப்பாவி ஜமாஅதே இஸ்லாமி ஆதரவாளர்களிடம் காட்டாதீர்கள். நீங்கள் சரியாகச் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையை பாழ்படுத்தி விடாதீர்கள். பாவம் அவர்கள். நீங்கள்தான் நரகத்தின் கொள்ளிக்கட்டையாக விரும்புகிறீர்கள் என்றால் அந்த அப்பாவிகள் என்ன கெடுதி செய்தார்கள் உங்களுக்கு? ஆன்மீகத்திலும், மார்க்கத்திலும் ஏதாவது தெளிவு கிடைக்குமா? மன அமைதி கிடைக்குமா என்பதைத் தவிர அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. பட்டம் பதவிக்கு ஆசைப்படாத, அமீர், முன்தசிப் பதவிகளை நாடாத தூய்மையான அவர்களை சற்று சுயமாக சிந்திக்க விடுங்கள். உங்கள் ஊரில் குர்ஆன், ஹதீஸைக் கற்றுக்கொள்ள ஏதாவது ஏற்பாடுகள் அவர்கள் செய்தால் சற்று அதற்கும் இடம் கொடுத்துப் பாருங்கள். அவர்கள் மூலமாவது அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியைக் காட்டலாம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP