இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னர்கள் இலங்கையை கைப்பற்றியிருந்தால்… இலங்கையின் பௌத்த விகாரைகளும், கோயில்களும் மசூதிகளாக மாறியிருக்குமா?
ஜனநாயக நாட்டுக்குறிய அம்சங்கள் இலங்கையில் உள்ளனவா? என்ற தலைப்பில் “வீரகேசரி வாரமஞ்சரி” யில் (05.08.2012) வெளியிடப்பட்ட ஒரு ஆக்கத்தில் கட்டுரையின் போங்குக்கு சற்றும் தொடர்பில்லாமல் “இந்தியாவை கைப்பற்றிய முகலாய மன்னர்கள் இலங்கையைக் கைப்பற்றியிருந்தால் இன்று பௌத்தர்களின் திருத்தளமாக விளங்கும் தலதா மாளிகை பெரிய மசூதியாக மாறியிருக்கும். பல விகாரைகளும், இந்துக் கோயில்களும் இருந்திருக்காது. இன்றும் பெருந்திரளான மக்கள் கிருஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் தழுவுவதை யாவரும் அறிவர். இதற்குக் காரணம் என்ன? என்று யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவற்றுக்கெல்லாம் மக்களிடையே நிலவும் அறியாமையும், வருமையுமே காரணம்.” என்று ஒரு செய்தியை வேண்டுமென்று இஸ்லாமிய சமுதாயத்தின் மீது அபாண்டம் சுமத்தும் விதமாக வெளியிடப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட ஆக்கத்திற்கு மறுப்பாக “வீரகேசரி வாரமஞ்சரி” பத்திரிக்கைக்கு அனுப்பப்பட்ட ஆக்கத்தை இங்கு பிரசுரிக்கின்றோம்.
நிர்பந்த மத மாற்றத்தை இஸ்லாம் ஆதரிக்கின்றதா?
ஜனநாயக நாட்டுக்குறிய அம்சங்கள் இலங்கையில் உள்ளனவா? என்ற தலைப்பில் சகோதரர் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்களினால் எழுதப்பட்டுள்ள ஆக்கத்தில் இஸ்லாத்தைப் பற்றியும், முகலாய மன்னர்கள் பற்றியும் தவறான கருத்துக்கள் கட்டுரையின் போங்குக்குத் தொடர்பில்லாமல் திணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பிட்ட கட்டுரையின் ஒரு பத்தியில் கீழ்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.
“இந்தியாவை கைப்பற்றிய முகலாய மன்னர்கள் இலங்கையைக் கைப்பற்றியிருந்தால் இன்று பௌத்தர்களின் திருத்தளமாக விளங்கும் தலதா மாளிகை பெரிய மசூதியாக மாறியிருக்கும். பல விகாரைகளும், இந்துக் கோயில்களும் இருந்திருக்காது. இன்றும் பெருந்திரளான மக்கள் கிருஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் தழுவுவதை யாவரும் அறிவர். இதற்குக் காரணம் என்ன? என்று யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவற்றுக்கெல்லாம் மக்களிடையே நிலவும் அறியாமையும், வருமையுமே காரணம்.”
இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை தனித்தனியாக நாம் ஆராய வேண்டியுள்ளது.
முகலாய மன்னர்கள் என்பவர்கள் யார்?
பாரத இந்தியாவை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்தவர்கள் முகலாய மன்னர்கள். இவர்கள் முஸ்லீம் மன்னர்கள் என்று பலராலும் பொதுவாக அவதானிக்கப்படுகின்றார்கள். உண்மையில் இவர்கள் முஸ்லீம் மன்னர்கள் என்ற குடைக்கின் கீழ் இருந்தாலும் இவர்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் தொடர்பிருக்கவில்லை என்பதே தெளிவான விடயமாகும்.
காரணம் முகலாய மன்னர்களைப் பொருத்த வரையில் இந்தியாவில் இஸ்லாமிய கருத்துக்களை முன்னிருத்தியோ, அல்லது இஸ்லாமிய கலாசாரங்களை அடிப்படையாகக் கொண்டோ ஆட்சி அமைத்தவர்கள் அல்ல.
இவர்களின் ஆட்சியில் இஸ்லாமிய வாடை கூட இல்லை என்பதை வரலாற்றை ஆய்வு செய்யும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும்.
இஸ்லாம் தடை செய்த பல காரியங்களை இவர்கள் ஆகுமாக்கியிருந்தார்கள். பொதுவாக ஒரு மன்னர் எப்படி களியாட்டங்களுடன் தொடர்பான அரண்மனையை கொண்டிருப்பாரோ அதே நிலை இவர்களிடமும் காணப்பட்டது. மட்டுமன்றி இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றமான “தீனே இலாஹி” என்ற புதிய மத சித்தாந்தத்தைக் கூட முகலாய மன்னர்கள் உருவாக்கினார்கள்.
முகலாய மன்னர்கள் மாற்றுமத வழிபாட்டுத் தளங்களை மசூதிகளாக மாற்றினார்களா?
குறிப்பிட்ட ஆக்கத்தின் சொந்தக்காரரான சகோ. அருளானந்தம் அவர்கள் முகலாய மன்னர்கள் இலங்கையை ஆட்சி செய்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தனது கற்பனை வளத்தினை வலிய சென்று கட்டுரைக்குள் திணித்திருக்கிறார்.
இவர்கள் இப்படி செய்திருந்தால், என்று செய்யாத செய்யவும் நினைக்காக செயல்பாடுகளை தனது கற்பனை எண்ணத்தின் படி கட்டுரையில் திணிப்பது அல்லது மக்கள் மத்தியில் பரப்ப முனைவது என்பது ஒரு இனத்தின் மீது தேவையற்ற காழ்புணர்வை, துவேஷத்தைத் தூண்டும் செயலாக இருக்கிறது.
காரணம் இலங்கையில் இருக்கும் அத்தனை மக்களும் இந்தியாவின் வரலாற்றை அறிந்தவர்கள் அல்ல. இந்திய வரலாறு தெரியாத மக்கள் மத்தியில் இந்தியாவின் வரலாற்றில் சுமார் 800 வருடங்கள் இடம் பிடித்த ஒரு சாராரை தவறாக சித்தரிக்க முனையும் செயலாகவே கட்டுரையாளரின் மொழி நடை அமைந்திருக்கிறது.
“இந்தியாவை கைப்பற்றிய முகலாய மன்னர்கள் இலங்கையைக் கைப்பற்றியிருந்தால் இன்று பௌத்தர்களின் திருத்தளமாக விளங்கும் தலதா மாளிகை பெரிய மசூதியாக மாறியிருக்கும். பல விகாரைகளும், இந்துக் கோயில்களும் இருந்திருக்காது.” என்ற கட்டுரையாளரின் வரிகள் எதை உணர்த்துகின்றன? வரலாற்றை புரட்டும் தந்திரத்தை தான் தெளிவுபடுத்துகின்றது.
காரணம் இந்தியாவின் வரலாற்றில் முகலாய மன்னர்கள் கோயில்களையோ அல்லது மற்ற மதத்தினரின் வணக்கத் தளங்களையோ உடைத்துவிட்டு அந்த இடத்தில் மசூதிகளை கட்டினார்கள் என்ற ஒரு ஆதாரத்தைக் கூட கட்டுரையாளரினால் முன் வைக்க முடியாது.
இந்திய வரலாற்றை முறையாக அறிந்த ஒருவர் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க மாட்டார் என்பதே நிதர்சனமானதாகும்.
மட்டுமன்றி இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் ஒரு தளம்பல் நிலையை கட்டுரையாளர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார் என்பது தெளிவாக விளங்குகின்றது.
முகலாய மன்னர்கள் இஸ்லாத்துடன் தொடர்பில்லாமல் இருந்த காரணத்தினால் தான் பல இந்துக் கோயில்களில் அன்னதானம் வழங்கும் வைபவங்களை அவர்களே முன் நின்று நடத்தியுள்ளார்கள். இந்தியாவில் பல பகுதிகளிலும் முலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்துக் கோயில்கள் தாராளமாக இருந்திருக்கின்றன. நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் கட்டுரையாளர் சாடை மொழியில் சாடுவது என்னவென்றால் முகலாயர்கள் கோயில்களை உடைத்தார்கள் என்பதுதான். உண்மையில் முகலாயல் அப்படி செய்ய நாடியிருந்தால் இன்றைக்கு இருக்கும் இந்தியாவில் பெரும்பகுதி இஸ்லாமியர்களின் கையில் தான் இருந்திருக்கும். குறைந்தபட்சம் பாதியளவுக்கான மாநிலங்களாவது முஸ்லீம்கள் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை என்பதில் இருந்தே முகலாய மன்னர்கள் இஸ்லாமிய மதத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதை போல “தீனே இலாஹி” என்ற தனி சித்தாந்தத்தை முகலாய மன்னர்களின் பரம்பரையில் வந்த அக்பர் போன்றவர்கள் செய்திருக்கவே மாட்டார்கள்.
முகலாய மன்னர்கள் கோயில்களை இடித்தார்கள் என்பது வரலாற்றுத் திரிப்பு.
சகோதரர் அருளானந்தம் அவர்கள் வரலாற்றை முழுமையாக அறியாமல், அல்லது அறிந்து கொள்ள முற்படாமல் குறிப்பிட்ட செய்தியை இடை செறுகள் செய்துள்ளதின் மர்மம் என்னவென்பது தெரியவில்லை. இருந்தாலும் முகலாய மன்னர்கள் கோயில்களை இடித்தார்கள் என்ற வரலாற்றுத் திரிப்புக் கதையை அடிப்படையாக வைத்துத் தான் இவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதனால் தான் “இந்தியாவை கைப்பற்றிய முகலாய மன்னர்கள் இலங்கையைக் கைப்பற்றியிருந்தால் இன்று பௌத்தர்களின் திருத்தளமாக விளங்கும் தலதா மாளிகை பெரிய மசூதியாக மாறியிருக்கும். பல விகாரைகளும், இந்துக் கோயில்களும் இருந்திருக்காது. என்ற தனது கருத்தை தினித்துள்ளார் என்பது தெளிவாக விளங்குகின்றது.
முகலாய மன்னர்கள் கோயில்களை இடிக்கவில்லை மாறாக கோயில்களுக்கும் சேர்த்து மானியம் வழங்கியுள்ளார்கள் என்பது கேணிப்பித்தன் அவர்களுக்குத் தெரியவில்லை போலும்.
இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கது.
17.04.2011 அன்று டெல்லியில் நடந்த INSTITUTE OF OBJECTIVE STUDIES என்ற கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேசும் பொழுது “இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும். இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும், இந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும், கஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன. ஆனால், உண்மை எதுவெனில்,மைசூர் மன்னன் மாவீரன் திப்பு சுல்தான் 153கோயில்களுக்கு மானியம் கொடுத்துள்ளார்.மேலும் சமஸ்கிருதம்- உருது மொழி இணைந்த இந்திய கலாச்சாரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.ஆனால் அதனை மறைக்க முகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி என்று கூறினார்.” தன்னுடைய இந்த உரைக்கு ஆதாரமாக வரலாற்று ஆசிரியர் B.N.பாண்டே எழுதிய “History in the Service of Imperialism” வரலாற்று நூலை மேற்கோள் காட்டி உள்ளார்.
சகோதரர் அருளானந்தம் அவர்கள் இந்தக் கருத்தை எழுதுவதற்கு தூண்டுகோலாக இந்தியாவின் பாபர் மசூதி பிரச்சினைதான் அடிப்படை என்று எண்ணுகின்றோம்.
ஆனால் உண்மையில் பாபர் என்ற முகலாய மன்னர் கூட கோவிலை உடைக்கவும் இல்லை. உடைத்து அந்த இடத்தில் மசூதியைக் கட்டவும் இல்லை என்பதே வரலாற்று உண்மை.
பாபர் கோவிலை இடித்தாரா?
எந்த இடத்தில் கோவிலை இடித்துவிட்டு பாபர் மசூதியைக் கட்டினார் என்று சொல்லப்படுகின்றதோ அதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத்தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள்ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ளதைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
முகலாய மன்னர்களின் ஆட்சி, பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் இந்திய மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
அந்த உயிலில்,
“மகனே! இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸ்லிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் இந்திய நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வரலாறு இப்படியிருக்கும் போது சகோதரர் அருளானந்தம் அவர்கள் “இந்தியாவை கைப்பற்றிய முகலாய மன்னர்கள் இலங்கையைக் கைப்பற்றியிருந்தால் இன்று பௌத்தர்களின் திருத்தளமாக விளங்கும் தலதா மாளிகை பெரிய மசூதியாக மாறியிருக்கும். பல விகாரைகளும், இந்துக் கோயில்களும் இருந்திருக்காது.என்று எழுதியிருப்பது முழு முஸ்லீம்களையும் எதிரிகளாக மற்ற சமூகத்தவர்கள் மத்தியில் எடுத்துக் காட்டுவதாகும். இதனை ஒரு போதும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
வரலாற்றை எழுதுபவர்கள், வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் வரலாற்றுத் திரிப்புகளை வைத்து தங்கள் கருத்தை தினிக்க முற்படுவது ஆரோக்கியமானதில்லை.
இஸ்லாத்தை பெருந்திரலான மக்கள் தழுவுவதற்கான உண்மைக் காரணம் என்ன?
அதே போல் சகோதரர் அருளானந்தம் அவர்கள் தனது கட்டுரையில் அதிகமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கான காரணம் என்னவென்பதைப் பற்றி எழுதும் போது இன்றும் பெருந்திரளான மக்கள் கிருஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் தழுவுவதை யாவரும் அறிவர். இதற்குக் காரணம் என்ன? என்று யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவற்றுக்கெல்லாம் மக்களிடையே நிலவும் அறியாமையும், வருமையுமே காரணம்.” என்று எழுதியுள்ளார்.
அருளானந்தம் அவர்களின் ஆக்கம் முழுக்க முழுக்க ஒரு சமுதாயத்தின் மேல் கொண்ட வெறுப்பைத் எடுத்துக் காட்டுவதாகவே அமைந்திருக்கிறதே தவிர உண்மை செய்தியை சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணம் மருந்துக்குக் கூட ஆக்கத்தில் காண முடியவில்லை.
கிருத்தவ மதத்தைப் பற்றிய அருளானந்தம் அவர்களின் கருத்தை இங்கு நாம் விளக்க முன்வரவில்லை. காரணம் இஸ்லாம் பற்றிய குற்றச் சாட்டுக்குத் தான் இங்கு பதில் தந்து கொண்டிருக்கிறோம்.
பெருந்திரலான மக்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றார்கள் என்பதை கட்டுரையாளரும் ஒத்துக் கொள்கின்றார். ஆனால் அதற்கு அவர் சொல்லும் குற்றச்சாட்டு காரணங்கள் இரண்டு அந்தக் குற்றச்சாட்டு காரணங்கள் உண்மையானவையா என்பதை நாம் தெளிவாக ஆராய வேண்டும்.
குற்றச் சாட்டு.
அதிகமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கான காரணம் அறியாமையும், வருமையுமே!
நமது பதில்.
உண்மையில் அறியாமையினால் எந்தவொரு மனிதனும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அப்படி ஏற்றுக் கொண்டதாக ஒரு ஆதாரத்தைக் கூட அருளானந்தம் அவர்களினால் காட்ட முடியாது.
சாதாரண பொது மக்கள் எப்படி இஸ்லாத்தின் கருத்துக்களின் பக்கம் ஈர்க்கப்படுகின்றார்களோ அதே அளவுக்கு படித்த மாபெரும் மேதைகளும் இந்த மார்க்கத்தின் பக்கம் நாளுக்கு நாள் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு புனித ரமழான் மாதத்திற்கு முன்பதாக பிரித்தானியாவின் பிரபல மத ஒப்பீட்டு ஆய்வாளர் அன்னா கென்னடி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் 39 வயதாகும் அன்னா கென்னடி அவர்கள் லன்டன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராவார்.
இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தைப் பற்றி சொல்லும் போது திருமறைக் குர்னைப் படித்தேன் குர்ஆன் என்னை மாற்றியது என்று தான் காரணம் கூறினார்.
அதே போல் எகிப்தின் பிரபல நடிகையான குயினி படில்லா, முன்னால் கிருத்தவ பாதிரி ஸு வாட்சன், கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசாரகர் டாக்டர் ஜாரி மில்லர், உலக புகழ் பெற்ற பொப்பிசைப் பாடகர் கெட் ஸ்டீபன் (தற்போது யுசுப் இஸ்லாம்), தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல், அமெரிக்காவின் முன்னால் மாடல் அழகி ஸாரா புக்கர், முன்னால் கிருத்தவ கன்னியாஸ்திரி இரேனா ஹான்டோனா, ஆமினா அசில்மி, அமெரிக்க தொழிலதிபர் ரிச்சர் பெட்டர்சன், பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் டோனி பிலேயரின் மணைவியின் தங்கையான இன்லா போன்றவர்கள் அண்மைக் காலத்தில் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஆவர். இவர்களில் யாரும் வருமையின் காரணமாகவோ அல்லது அறியாமையின் காரணமாகவோ இஸ்லாத்தை ஏற்றவர்கள் அல்ல.
இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப் பற்றிக் குறிப்பிடும் போது “குர்ஆனைப் படித்தோம் அதன் கருத்துக்கள் எங்களை மாற்றியது. அதனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்” என்றே கூறுகின்றார்கள்.
அது மட்டுமன்றி கிருத்தவர்களின் தலைமை பீடமான வத்திக்கானிலிருந்து வெளிவரும் லோசேர் வேடோர் ரோம்மானோ ( LOSSERVATOR ROMMANO ) என்ற பிரபல பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் கணிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கிறது என்றும், உலக சனத்தொகையில் 4ல் ஒருவா் முஸ்லிமாக வாழ்வதோடு, விகிதாசாரத்தின் அடிப்படையில் 28 சதவீதம் முஸ்லீம்களும் 24 சதவீதம் கத்தோலிக்கர்களும் காணப்படுவதுடன் மொத்த மக்கள் தொகையில் 130 கோடிப் பேர் முஸ்லீம்கள் என்றும் 112 கோடிப் பேர்தான் கிருத்தவா்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள் ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். (CNN) குறிப்பிடுகிறது.
அதேபோல் வல்லரவு நாடுகளில் பொதுவாக வருடத்திற்கு 15 புதிய பள்ளிவாயல்கள் கட்டப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சகோதரர் அருளானந்தம் அவர்கள் சொன்ன கருத்தில் உண்மையாளராக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அறியாமையினாலும், வருமையினாலும் தான் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற தனது அறியாமைக் கருத்துக்கு ஆதாரம் காட்ட வேண்டும்.
கடைசி வரைக்கும் அவரினால் காட்ட முடியாது.
இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இஸ்லாத்தைப் பொருத்த வரையில் இஸ்லாமிய மார்க்கத்தை பணத்தைக் கொடுத்தோ, அல்லது வேறு வேறு ஆசை வார்த்தைகள் காட்டியோ யாரும் பரப்புவது இல்லை. இஸ்லாமிய மார்க்கமும் அதைத் தடுக்கிறது.
உண்மைச் செய்தியைச் சொல்லி குர்ஆனினதும், நபியவர்களினதும் கருத்தைச் சொல்லித்தான் இஸ்லாத்தை மற்ற மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டுமே தவிர வருமையைப் பயன்படுத்தியோ அல்லது அறியாமையைப் பயன்படுத்தியோ மார்க்கத்தைத் திணிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பது சகோதரர் அருளானந்தம் அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்களாம்.
ஆக மொத்தத்தில் வரலாறுத் திரிப்புகளை உண்மை வரலாறாக எண்ணிய காரணத்தினால் ஊகங்களை ஆதாரமாக் கொண்டு சகோதரர் அருளானந்தம் அவர்கள் தனது கட்டுரையை தொகுத்திருக்கிறார் என்பது தெளிவாக விளங்குகின்றது.
சகோதரர் அருளானந்தம் அவர்கள் நாம் எடுத்துக் காட்டியுள்ள செய்திகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம்.