மானம் காக்க மார்க்கம் சொல்லும் ஆடை முறை.
ஆக்கம் S.H.R. ரஸ்மி
நிர்வாணத்தையே ஆடையாக அணிந்து அதையே நாகரிகம் என்று நினைக்கும் இந்தக் காலத்தில் இஸ்லாம் கூறும் ஆடை என்ற தலைப்பில் பேசுவது மிகவும் அவசியமானதே. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஆடையும் ஒன்று என்று அறிவில்லா மக்கள் கூட அறிந்துவைத்துள்ள நிலையில் ஆடையைப்பற்றி அறிவுலகுக்குக் கூறும் நிலை பரிதாபத்துக்குரியதே.ஆடையின் வாடையே இல்லாமல் ஆடை விளம்பரங்களுக்கு வரும் அரைகுறை விபச்சாரிகளை மூளையைக் கழற்றி மூலையில் வைத்துவிட்டு ரசிக்கும் மூடர்களை என்னவென்பது?ஆடைக் குறைப்பில் ஆத்ம திருப்தியடையும் அசிங்கங்களை அரங்கேற்றும் அலைவரிசைகள் அந்தரங்க உறுப்பில் அறிவை அடகுவைத்துள்ள நிலை கோமாளித்தனமானது. நடித்துக் காட்டுவதற்கும் காட்டி நடிப்பதற்கும் வித்தியாசம் தெரியாத சினிமா உலகம்தான் ஆடைச் சீரழிவுக்கு அத்திவாரம் இட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.உறுப்பை வெளிப்படுத்துவதில் உள்ள அக்கறையில் ஒருவீதத்தைக் கூட உண்மையை வெளிப்படுத்துவதில் ஊடகங்கள் காட்டவில்லை என்பது ஊறறிந்த உண்மை.
நடிகையின் இடுப்புக் கக்கம் பத்திரிகையின் நடுப் பக்கம் என்ற மரபு மாற்றியமைக்கப்பட இஸ்லாம் கூறும் உடுப்புச் சட்டமே தீர்வாகும்.ஆடை களைந்து வேடம் தரிக்கும் நடிகைகளின் தலைகீழ்க் கோட்பாடு களையப்பட வேண்டியதே என்பதை அறிய தன் மகள் ஆடை களையும் வரைப் பொறுத்திருப்பது அணை கடந்த வெள்ளம் என்பதை 1400 ஆண்டுக்கு முன்பே ஒவ்வொரு அப்பனுக்கும் இஸ்லாம் அறியத் தந்துள்ளது.
ஆணின் பலவீனத்தை அச்சொட்டாகத் அறிந்து வைத்து ஆடையை உரித்து அச்சாறு போடும் கசாப்புக் கடைக் களியாட்டங்களை இனியும் இந்த மண்ணில் அனுமதியோம் என்ற கோஷத்துடனும் ஆடையுடுத்தும் நிர்வாணமாக அலையும் காலம் வராமல் உலகம் அழியாது என்ற மானபியின் முன்னறிவிப்புப் பொய்யாகவில்லை என்ற ஒரு ஆச்சரியக் களிப்பிலும் இஸ்லாமிய ஆடைக்குள் நுழைவோம்.
கற்பைக் காக்க ஆடை
ஆதமுடைய மகனே உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும் அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சமெனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்கு இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல் குர்ஆன் 7. 26)
ஆடையின் அடிப்படை நோக்கம் மானத்தை மறைக்கவே என்று அல்லாஹ் தெளிவாக் கூறியுள்ளான். எனவே ஆண்களும் பெண்களும் மறைக்கப்படவேண்டிய உறுப்பக்களை மறைப்பது கட்டாயம் என்பது தெளிவு. மேலும் இதே வசனத்தில் அலங்காரத்துக்கு ஆடை அணிவதையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
அழகுக்காக ஆடை
இப்னு மஸஉத் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவரகளிடம் ”ஒரு மனிதர் தனது ஆடையும காலணியும் அழகாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறார். இது பெருமையா? ” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ”அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான்.” என்று கூறினார்கள். நூல் முஸ்லிம் 147
எனவே தத்தமது வசதிக்கு ஏற்ப அழகான ஆடைகளை அணிவது மார்க்கத்துக்கு முரணாகாது.
வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும் போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீ்ங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்கு இவ்வாரே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப் படுத்தினான். (அல்குர்ஆன் 16. 81)
இங்கு ஆடை என்பதை அல்லாஹ் ஒரு அருள் என்று கூறுகிறான். உலகத்திலுள்ள உயிரினங்களைப் பொருத்த மட்டில் மனிதன் மட்டுமே ஆடை அணிபவனாக இருக்கிறான். தட்ப வெப்ப மாற்றங்களுக்கு ஏனைய விலங்குகளை விட மனிதன் குறைவாகவே இசைவாக்கம் அடைந்துள்ளான் என்று அறிவியல் கூறுவது எத்தனை பெரிய உண்மை என்பதை குர்ஆன் பறைசாற்றுகிறது.
கந்தல் ஆனாலும் கசக்கிக் கட்டு என்ற பழமொழியை உண்மைப் படுத்தும் விதமாக நபிகளார் பின்வருமாறு கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்திருப்பதைப் பார்த்தார்கள். அப்போது ” இவர் தனது ஆடையை தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட்டார்கள். நூல் அபூ தாவூத் 3540
ஆடை விடயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இஸ்லாம் சில பொதுவான தடைகளை விதித்துள்ளது.
இரு சாராரும் காவி நிற ஆடையைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளை இட்டுள்ளது. காவி நிறம் தவிர்ந்த எந்த நிறத்தை உடுத்துவதும் மார்க்கத்தில் தடையல்ல. நபிகளார் சிவப்பு நிற ஆடையில் ஜொலித்ததாக ஷமாஇல் திர்மிதியில் கூட ஒரு நபிமொழி உள்ளது.
ஆண்கள் பெண்களைப் போன்றும், பெண்கள் ஆண்களைப் போன்றும் ஆடை அணிவதும் மார்க்கத்தில் தடையாகும்.
மேலும் தரையில் இழுபடும் வண்ணம் ஆடை அணிவதும் தடையே. தரையில் ஆடையை இழத்து செல்லக் கூடாது. (புகாரி 5784)
பெண்களைப் பொருத்த வரை தமது முகம், மணிக்கட்டு தவிர அனைத்தும் மறைக்கவேண்டும் என்பது மார்க்கத்தின் நிலை. அதை எந்த ஆடையாலும் மறைக்கலாம்.
ஆண்களக்குப் பட்டு ஆடை ஹராமாகும்.
மேலும் இரு சாராரும் தமது உடல் பரிமாணம் தெரியும் வண்ணம் இறுக்கமான ஆடை அணிவதும் தடை. ஆடை அணிந்தும் நிர்வானிகள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். அதன் வாடையையைக் கூட நுகர மாட்டார்கள் என்பது நபிமொழி (முஸ்லிம் 4316). இது தவிர ஆடையில் வேறு எந்தத் தடையையும் மார்க்கம் ஏற்படுத்தவில்லை.
அனைத்துக்கும் வழிகாட்டவந்த இஸ்லாமிய மார்க்கத்தில் ஆடைக்கான வழிகாட்டுதல் களையப்பட்டுவிட்டதோ என்று கருதும் அளவுக்கு நம்மக்கள் ஆடையில் காட்டும் தளர்வுப் போக்கு உணர்த்துகிறது. ஜன்னல் வைத்த ஜாக்கட்டில்தான் இன்னல் ஜோடிக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு நடப்பு உணர்த்தியும், தொடைப்பகுயும், இடைப்பகுதியும், ஆடை தொக்குநிற்கும் பகுதியாக இருப்பது இன்னும் எத்தனை கற்பழிப்புகளுக்கான தொடக்கமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. தலையை மறைப்பது பிற்போக்கு என்று பெண்ணியம் பேசும் நாக்கு, மூளைக்கும் முடிக்கும் முடிச்சுப் போடுவதுதான் உண்மையில் பிற்போக்கு என்பதை உணரத் தவறியது ஏனோ?
0 comments:
Post a Comment