6.6.12

இலங்கை உலமாக்களின் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற வெற்றுக் கோஷம்.

நமது ஆன்மீகவாதிகளின் ஆடையில் உள்ள ஒற்றுமை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த மார்க்கத்தைப் பின்பற்றுவதில் இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒற்றுமையாய் ஏற்றுத்தான் ஆக வேண்டும். வல்ல நாயன் வகுத்துத் தந்த ஒரு வழிப்பாதையை விட்டு அவரவர் விரும்பியவாறு பல வழிப்பாதைகளைப் பயன்படுத்தி பலரது கண்ணைக் கட்டி இழுத்துச் செல்கிறார்கள் என்பதையும், முஸ்லிம்கள் தமது உள்ளங்களில் உயர்வான இடம் கொடுத்து மதிக்கின்ற உலமாக்கள் பேசிய, எழுதிய கருத்துக்களை வைத்தே முஸ்லிம்களின் ஒற்றுமையின்மைக்குக் காரணம் நம்மில் உள்ள சில ஆன்மீகவாதிகள் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தைப் படித்தவர்கள் என்பது உண்மை. படித்தது உணரப்பட்டு வாழ்க்கையில் வெளிக்காட்டத் தவறி விட்டனர் என்பதற்கு இவர்களே சாட்சி.

# மார்க்க அறிஞர்கள் ஜும்ஆ பயான் நடத்தும் போது கருத்து வேறுபாடுகளை மக்கள் முன் கொட்டக் கூடாது. இது அப்துல் நாஸர் அவர்கள் 11.06.2010 இல் தினகரன் பத்திரிகையில் எழுதிய ஆக்கத்தின் சுருக்கம்.
# ஒற்றுமை உணர்வை இழந்தமையே முஸ்லிம்களின் பின்னடைவுக்குக் காரணம்’ இது தெவட்டகஹ தர்கா இமாம் ஏ.சீ.அஹ்மத் பளீல் 12.09.2011 இல் தினகரன் பத்திரிகையில் எழுதிய ஆக்கத்தின் சுருக்கம்.
# அல்குர்ஆனில் அற்புதம், மனிதனுக்கு இருக்கின்ற அறிவை வைத்து விளங்க முடியாதவைகளும் உள்ளன. இது கெகுனுகொள்ள இர்பானியா வளாக அதிபர் எம்.ஆர்.அஸீஸ் அவர்கள் 01.04.2011, 08.04.2011 ஆகிய தினங்களில் தினகரனில் எழுதிய ஆக்கத்தின் சுருக்கம்.
# மக்களுக்கு புரிய முடியாத அம்சங்களை கதீப்மார்கள் முற்று முழுதாக தவிர்ப்பது அவசியமாகும். இது எம்.எச்.எம்.பளீல் (நளீமி) அவர்கள் 20.01.2011 இல் எழுதிய ஆக்கத்தின் சுருக்கம்.
அப்துல் காதர் ஜீலானி அவர்கள் ஜின்களின் ஆட்டங்களைக் கட்டுப்படுத்தினார்கள். நான் அல்லாஹ்வின் படைப்புக்களில் ஓர் அற்புதப் படைப்பாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வேறுபாடு உண்டு. உள்ளும் புறமும் எனக்கு வெளிச்சம், நான் பேசுகின்ற சபையில் நபிமார்களும், வலிமார்களும் அல்லாஹ்வின் அருள் தாங்கிய ​அனைவரும் அமர்ந்துள்ளார்கள். இது 11.03.2011,18.03.2011 ஆகிய தினங்களில் வெளியான வீரகேசரி பத்திரிகையில் எம்.ஏ.எம்.நுஃமான் அவர்கள் எழுதியதின் சுருக்கம்.
# ஒற்றுமை காலத்தின் தேவை, அது சன்மார்க்க கடமை. நம் மத்தியில் அடிப்படையில் முரண்பாடில்லை. வழிபாடுகளிலும் அணுகு முறையிலும் தான் சில உடன்பாடற்ற நிலைகள் காணப்படுகின்றன. இத்தகைய விடயங்களில் முரண்பட்ட நிலைப்பாடு எடுப்பதில் தவறில்லை. இது ஏ.சீ.அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 16.09.2011, 23.09.2011 ஆகிய தினங்களில் தினகரன் பத்திரிகையில் எழுதிய ஆக்கத்தின் சுருக்கம்.
# குர்ஆனின் நிழலில், நபி வழியில் மாத்திரமே வாழ வேண்டும் என்று கூறி மர்ஹும் ஸகரிய்யா அவர்கள் எழுதிய தஃலீம் தொகுப்பை பச்சை பச்சையாய் கொச்சைப் படுத்தியதால் P.து.யின் பிரசங்கத்தை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கூறினேன். இது தப்பா? இது 04.04.2005, 05.04.2005 ஆகிய தினங்களில் மர்ஹும் நியாஸ் மௌலவி அவர்கள் தினகரன் பத்திரிகையில் எழுதியதன் சுருக்கம்.
# பேருவலை மஹகொடையில் இரு முஸ்லிம் குழுக்களிடையே மோதல், இருவர் பலி, பலர் படுகாயம், ஒரு பள்ளியும் பல புனித குர்ஆன்களும் தீக்கிரை. இது 25.07.2009 இல் இலங்கையில் வெளியாகும் அதிகமான பத்திரிகைகள் தாங்கி வந்த தாங்க முடியாத செய்தி.
# பேருவலை மஹகொடையில் நடந்த அசம்பாவிதத்தைக் கருத்தில் கொண்டு, அகில இலங்கை உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் கலங்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய கருத்தொற்றுமையை காற்றில் பறக்க விட்டு விட்டு காடையர்களாக மாறி புத்தியை பாவிக்க வேண்டிய நம்மவர்கள் கத்தியை பாவிக்கத் துவங்கி விட்டார்களே! என்று பதறிப்போன உலமா சபை ஏகமனதாய் எடுத்த முடிவு தான் வேற்றுமையில் ஒற்றுமை. இதை மௌலவிமார்கள், கதீப்மார்கள், மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஏற்று ஜும்ஆ பயான் நடத்த வேண்டும் என்று அகில இலங்கை ஜாமியதுல் உலமா சபை வேண்டுகோள் விடுத்தது.
அந்தக் காலக்கட்டத்தில் ரிஸ்வி முப்தி அவர்கள் புறக்கோட்டையில் அமைந்துள்ள சம்மான் கோடு ஜும்ஆ பயான் நடத்தும் போது “தொழுகையின் போது நெஞ்சில் தக்பீர் கட்டுங்கள், அதன் கீழ் கட்டுங்கள், கட்டாமல் விடுங்கள், அத்தஹியாத்தில் ஆள்காட்டி விரலை ஆட்டுங்கள் நீட்டுங்கள், எந்த இயக்கத்தில், தரீக்காவில், மத்ஹபில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள், ஒற்றுமையாய் இருந்து கொள்ளுங்கள்” இது தன் அவர் நிகழ்த்திய ஜும்ஆவின் சுருக்கம். இது தான் அவரின் வேற்றுமையில் ஒற்றுமையின் விளக்கம்.
மேலே உள்ள கருத்துக்களை கூறிய, எழுதியவர்களுள் அதிகமானோர் நம் முஸ்லிம் மக்களால் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டு, முதல் தர இடம் கொடுக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் நாம் ஒற்றுமையின்றி முரண்பட்டிருக்கின்றோம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முரண்பாடுகளோடு வாழ்வதில் தவறில்லை என்பதே உலமா சபையின் முடிவு.
முஸ்லிம்கள் என இன்று இலங்கையில் வாழ்பவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் பல்வேறு மதங்களை ஆய்வு செய்து இஸ்லாம் சரியான வாழ்க்கை நெறி என்று உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லர். மாறாக தமது பெற்றோர் முஸ்லிம்களாக இருந்ததால் தம்மையும் முஸ்லிம்களில் சேர்த்துக் கொண்டார்கள். இஸ்லாத்தின் அடிப்படை என்ன என்பதை அறியாதவர்கள் கூட இத்தகையோரில் உள்ளனர்.
நானோ ஆஸ்திக்கு வந்த நாஸ்திகன், நான் பார்த்து கேட்டு விளங்கி வைத்துள்ள இஸ்லாத்திற்கும் அகில இலங்கை ஜாமியதுல் உலமா சபையும் ஏனைய உலமா பெருமக்களும் விளங்கி வெளிக்காட்டும் இஸ்லாத்திற்கும் வேறுபாடு இருப்பதை அவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்தும் எழுதிய ஆய்வுகளிலிருந்தும் புரிந்து கொண்டேன். நான் விளங்கிய, நம்பிய இறுதி நபி போதித்த கொள்கையோடு ஒப்பிட்டு எழுதுகிறேன். நான் விளங்கி வைத்துள்ள கருத்து பிழையாய் இருந்தால் வஹியை ஆதாரமாகக் காட்டி சுட்டிக் காட்டுங்கள். அது என் போன்ற கருத்துள்ளவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும் என நம்புகிறேன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு தமிழில் இரண்டு அர்த்தங்களைக் கொடுக்கலாம்.
1.             மாறுபட்ட கருத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் பொதுவான ஒரு கொள்கையில் ஒன்றுபடுவது.
2.             எந்தக் கொள்கையிலும், எந்த இயக்கத்திலும் சேராமல் நடுநிலைமை வகிப்பது.
ரிஸ்வி முப்தி அவர்கள் சொல்லி, விளக்கம் கொடுத்த வேற்றுமையில் ஒற்றுமையோ இந்த இரண்டிலும் அடங்காத ஒன்று. உழைப்பதும் உண்பதும் தான் இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் என்றால் அனைத்தும் இவ்வுலக வாழ்க்கையோடு முடிந்து விடும் என்றால் உலமா சபைத் தலைவர் வேண்டிக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை கட்டாயம் தேவைதான். ஆனால், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் அதுவல்ல. படைத்த நாயன் சொல்வதைப் பாருங்கள்.
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) படைக்கவில்லை.                  (அல்குர்ஆன் 51 : 56)
அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33 : 21)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹியின் அடிப்படையில் எப்படி வாழ்ந்தார்களோ, எப்படி வாழச் சொன்னார்களோ, எதனை அனுமதித்தார்களோ அனைத்தும் வணக்கம் தான்.
வாழ்க்கையே வணக்கம் தான் என்பதையும், அந்த வாழ்க்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்து வாழ வேண்டும், அவர்களை over take செய்து பின்தள்ளி வாழக்கூடாது என்பதை மேலேயுள்ள திருக்குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.
மக்களே எனக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார்கள். எந்தப் புது மார்க்கமும் உருவாகாது, எனவே மக்களே நன்றாகச் சிந்தியுங்கள். மேலும் நான் கூறுகின்ற செய்திகளை புரிந்து கொள்ளுங்கள். நான் இரண்டு விடயங்களை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். ஒன்று குர்ஆன். இன்னொன்று எனது வழிமுறை. இவற்றை நீங்கள் பின்பற்றும் நாள் வரை வழி தவற மாட்டீர்கள்.
மக்களே உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பற்றி பிடிக்கும் காலமெல்லாம் வழி தவற மாட்டீர்கள். அல்லாஹ்வின் வேதம் நபியின் வழி முறை (Sunanul Kubra Lil Baihakee Vol : 10 Page110)
வல்ல நாயன் அவனது திருமறையில் “இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5 : 3)
ரிஸ்வி முப்தி அவர்களே! சம்பந்தப்பட்ட உலமாப் பெருமக்களே! நீங்கள் காண விளையும் வேற்றுமையில் ஒற்றுமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற இரண்டில் இருக்கின்றதா? காட்டுங்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் சொந்தக்காரன் அல்லாஹ். அவன் முழுமைப்படுத்திய மார்க்கத்தில் கூட்டல், குறைத்தல் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே வழங்கப்படவில்லை என்பதை கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனத்தைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம், பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரை. (அல்குர்ஆன் 69 : 44 – 48)
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான். (அல்குர்ஆன் 2 : 173)
எனவே, உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக. (அல்குர்ஆன் 108 : 2)
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா என்னுமிடத்தில் ஒட்டகத்தை குர்பானி கொடுக்க நேர்ச்சை செய்திருந்தார். ஆகவே, அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் “நான் புவானா என்னுமிடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்துள்ளேன் (அதை நிறைவேற்றலாமா?)” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அறியாமைக்காலத்தவர்கள் வணங்கிய சிலைகளில் ஏதாவதொரு சிலை அங்கிருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள் இல்லை என்றார்கள். அவர்களின் எந்த விழாவாவது அங்கு கொண்டாடப்படுகிறதா? என்று கேட்டார்கள். அதற்கும் நபித் தோழர்கள் இல்லை என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உன்னுடைய நேர்ச்சையை நீ நிறைவேற்றலாம், அல்லாஹ்வுக்கு மாற்றமான காரியங்களிலும், ஆதமுடைய சந்ததிக்கு சக்திக்கு மீறிய காரியங்களிலும் நேர்ச்சை நிறைவேற்றுதல் கூடாது. (நூல் : அபூதாவூத் 2881)
அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்யப்பட்டதையே அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சந்தேகமான இடங்களில் அறுக்காதீர் என்று கூறிய பின், இதற்கு மாறாகக் கூறும் அகார் முஹம்மத் அவர்களின் உதாரணத்தை ஏற்கக் கூடாது என்பது தான் எனது முடிவு.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள். (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். (அல்குர்ஆன் 4 : 140)
அல்பகராவின் 173வது வசனத்தையும், அல்கவ்ஸர் 2வது வசனத்தையும், இந்த இரு வசனங்களுக்கும் விளக்கம் தந்த இறைவனின் இறுதித் தூதரையும் புறக்கணித்து விட்டு, அதிகமான இடங்களில் அவ்லியாக்கள் பெயரால் வருடா வருடம் நடக்கும் விழாக்களில் பங்கு கொள்வது, அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்வதாக உங்களது உள்ளம் உணரவில்லையா?
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33 : 36)
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2 : 159)
இந்த நிலைக்கு நானோ, உலமா பெருமக்களோ, நம் சமுதாயமோ ஆளாகக் கூடாது. உலமா சபையின் வேற்றுமையில் ஒற்றுமை காணுங்கள் என்ற தவறான கோட்பாட்டில் இதனை அறிமுகப்படுத்திய அவர்களாலேயே ஆடாமல் அசையாமல் நிற்க முடியவில்லை என்பதை 07ஃ10ஃ2011 இல் ரிஸ்வி முப்தி அவர்கள் புறக்கோட்டையில் உள்ள சம்மான்கோடு பள்ளியில் நிகழ்த்திய பயானே அவருக்கெதிரான சாட்சி. இதோ அந்த பயானின் ஒரு பகுதி.
“இங்கு சிலர் தனிப்பள்ளி அமைத்து தமக்கென இமாம்களை ஏற்படுத்தி தொழுகை நடத்துகிறார்கள். அடுத்தவர்களது இமாம்களைப் புறக்கணிக்கிறார்கள். ஒற்றுமையாய் வாழ்ந்த முஸ்லிம்களை இரு கூறுகளாக்கிவிட்டார்கள். தனிப்பள்ளி அமைத்தவர்களை தகாதவர்களாகக் காட்டி, மற்றவர்கள் காதியானிகளா? சிலை வணங்கிகளா?” என்ற கேள்வியை முன்வைத்தார்.
உலமா சபையின் ஏகோபித்த முடிவான “வேற்றுமையில் ஒற்றுமை காணுங்கள்” என்ற தவறான கோட்பாட்டை அதன் தலைவரே மீறியுள்ளார்.
நபிகள் நாயகம் அவர்கள் வாழும் காலத்தில் இறைத்தூதரோடு இணைந்து ஒற்றுமையாய் வாழ்ந்த நபித்தோழர்களை பார்த்து வல்ல நாயன் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக்கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் 3 : 103)
உலமா சபையோ, பிரிந்து விட்டவர்களைப் பார்த்து அவரவர் கொள்கைக் கோட்பாட்டில் இருந்து கொள்ளுங்கள். யாரும் யாருடைய கொள்கையையும் விமர்சிக்காதீர்கள் என்கிறார்கள்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3 : 104)
உமக்குக் கட்டளை இடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணைவைப்போரை புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 15 : 94)
இத்தகைய சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சமுதாயத்தில் எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும் பிளவுகள் ஏற்பட்டாலும் இறைவனின் கட்டளை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்.
ரிஸ்வி முப்தி அவர்களே! தனிப்பள்ளி அமைத்து முஸ்லிம்களை கூறு போட்டிருக்கும் அப்பிரிவினர் யார்? அவர்களது கொள்கை என்ன? என்பதை விரிவாக விளக்கினால் அந்தக்கொள்கை நபிகள் நாயகம் விட்டுச் சென்ற குர்ஆனிலும் நபிவழியிலும் இருக்கின்றதா? என்று நம்மாலும் பார்க்க முடியும். இதனை ஊருக்கு உரக்கச் சொல்வது உங்களது உலமா சபையின் கடமை. செய்வீர்களா?
M.S.M. ஷாஃபி.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP