27.8.12

“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.


கசகசா மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?  தொடர்பில் சில சகோதரர்கள் இரண்டு சந்தேகத்தை எழுப்பியுள்ளார்கள்.

முதலாவது சந்தேகம் :
குளிர் பானங்களுக்கு பயன்படுத்தப் படும் “கருப்பு கசகசா” வின் நிலை என்ன?
“கருப்பு கசகசா” வைப் பொருத்த வரையில் அது “கசகசா” இனத்தைச் சேர்ந்தஒன்றல்ல அதன் பெயர் “சப்ஜா”  (basil seeds) என்பதாகும். துளசி செடி வகைகளில் இனிப்புத் துளசி என்ற வகையைச் சேர்ந்த தாவரத்தினால் இந்த சப்ஜா என்ற பதார்த்தம் தயாரிக்கப்படுகின்றது.
இந்த சப்ஜா வைப் பொருத்த வரையில் இதுவொரு சுவை சேர்க்கும் பதார்த்தமாகும். பெரும்பாலும் இதற்கு பாலுடா விதை (faluda seeds) என்ற பெயரையே பயன்படுத்துவார்கள். இலங்கையில் சில இடங்களிலும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் மாத்திரம் இதற்கு கருப்பு கசகசா என்ற பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதன் உண்மையான பெயர் “சப்ஜா” எப்பதாகும்.
இந்த “சப்ஜா” என்ற பதார்த்தம் உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைஉண்டாக்கும் தன்மை கொண்டதாகும். அதே போல் இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் இது நிவாரணி என்று சொல்லப்படுகின்றது. அத்துடன் வாந்தி ஏற்படும் தன்மையை இது இல்லாமலாக்கவும் செய்யுமாம்.
அதனால் இந்த கருப்பு கசகசா (சப்ஜாவை) வை பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஓபியம் பொப்பி என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் உண்மையான கசகசா தான் தடுக்கப்பட்டது.
இரண்டாவது சந்தேகம் :
ஓபியம் பொப்பி (Opium Pappy) என்ற தாவரத்தின் மூலம் போதை பொருள் தயாரிக்கிறார்கள். ஆனால் அதன் விதைக்கும் போதைக்கும் தொடர்பில்லையே அப்படியிருக்கும் போது அதை எப்படி ஹராம் என்று சொல்வது?
ஓபியம் பொப்பி என்ற தாவரத்தில் இருந்து போதை பொருள் தயாரிக்கிறார்கள் என்பதற்காக மாத்திரம் கசகசா வை நாம் தடை என்று சொல்லவில்லை.
ஓபியம் பொப்பி (Opium Pappy) என்ற தாவரத்தில் இருந்து ஹெராயின் என்ற போதைப் பொருள் தயார் செய்யப்படுகின்றது. இதைத் தயார் செய்வதற்கு பொப்பி தாவரத்தின் பால் பயன்படும். அந்தப் பாலில் போதை ஏற்படுத்தக் கூடிய ஒரு பதார்த்தம் இருக்கிறது. அதற்கு ஓபியேட் (Opiate) என்று பெயர் சொல்லப்படும்.
இந்த ஓபியேட் என்ற பதார்த்தம் பொப்பி தாவரத்தின் பாலில் இருப்பதினால் தான் ஹெராயின் போதைப் பொருளாக இனம் காணப்பட்டுள்ளது.
ஓபியம் பொப்பி செடியில் இருந்து பெறப்படும் போதை பொருளின் பொதுவான பெயர் ஒபியேட் (Opiate) என்பதாகும். இதில் மார்பின் (Morphine) கோடியம் (Codeime) ஆகிய இரு வகையான போதை தரக்கூடிய பதார்த்தங்கள் அடங்கியுள்ளன.
ஓபியேட் என்ற போதையை ஏற்படுத்தக் கூடிய பதார்த்தம் அதன் விதையிலும் சிறு அளவுக்கு காணப்படுகின்றது. அனதால் தான் அது ஹராம் என்றாகின்றது.
அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில்  குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : திர்மிதீ (1788)
ஓபியம் பொப்பி செடியில் இருந்து பெறப்படும் “கசகசா” கருப்பு, வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களிலும் காணப்படுகின்றது. இந்த இரண்டு நிற கசகசாவும் ஹராமானதாகும்.
பொதுவாகவே ஓபியம் செடியில் இருந்து பெறப்படும் “கசகசா” வை பிரியானி போன்ற சாப்பாட்டில் தான் பெரும்பாலும் பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது.
(கருப்பு கசகசா என்ற பெயரில் அழைக்கப்படும் சப்ஜா என்பது வேறு  கசகசா என்பது வேறு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸின் படி ஓபியம் பப்பி செடியில் இருந்து பெறப்படும் “கசகசா” விதையிலும் போதை இருப்பதினால் அந்த விதையை நாம் பயன்படுத்துவது கூடாது.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP